தமிழ், முஸ்லிம் மக்கள் மோதிக்கொள்வதையே ஒரு தரப்பு விரும்புகிறது – சாணக்கியன் எம்பி குற்றச்சாட்டு!

இந்த  நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் பேச வேண்டும், முஸ்லிம்  மக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் பேச வேண்டும். இரண்டு இனத்தவர்களும்  அடித்துக் கொள்ள வேண்டும்.அதனூடாக தாம் அரசியல்  இலாபம் தேட வேண்டும்  என்பது  ஒரு தரப்பின் எண்ணமாகும்.தற்போதைய  பிரச்சினையை  கொண்டு ஒரு தரப்பு  குளிர்காய்வது வெளிப்படையாக தெரிகிறது என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  குறிப்பிட்டார்.

முஸ்லிம் சகோதரிகள் அவர்களின் கலாசார அம்சங்களுடன்  பணிகளில் ஈடுபடும் வகையில் அரசாங்கம் சுற்றுநிரூபத்தை வெளியிட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதனை விடுத்து விட்டு கல்முனை வைத்தியசாலையை மாத்திரம் இலக்குப்படுத்தி அந்த மக்களையும், அதிகாரிகளையும், இனவாதத்துடன் குற்றஞ்சாட்டும் ஒருசில அரசியல்வாதிகளின் மிகவும் கேவலமான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பிரச்சினைக்கு அரசாங்கம்  முரண்பாடற்ற வகையில்  தீர்வை வழங்க வேண்டும்   எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற  பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம்  மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம்  சகோதார  சுகாதார சேவையாளர்களின்  சீருடை தொடர்பான பிரச்சினை  தற்போது பேசப்படுகிறது. பலர் பல விடயங்களை குறிப்பிடுகிறார்கள்.அனைவரும்   இதன் பின்னணியை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றியம் இந்த விடயம் பற்றி பேச வேண்டும் என்று சுகாதார அமைச்சர்  தனது உரையில் குறிப்பிடுகிறார். இந்த சம்பவத்துடன் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின்  கூட்டிணைவு  பறக்கப் போகிறது என்று அரசியல்வாதி ஒருவர்  குறிப்பிடுகிறார்.

தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதை விரும்பாத இரண்டு தரப்பினர்கள் இங்கு உள்ளார்கள். ஒன்று அரசாங்க தரப்பு, தமிழ் பேசும் பிரதான 06 அரசியல் கட்சிகள்  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எதிர்காலத்தில் அது தமக்கு சவாலாக அமையும் என்பதை அரசாங்கம் நன்நாக அமையும்.  இன்னொன்று, இனவாதத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படும் தரப்பு .

இந்த  நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் பேச வேண்டும்,  முஸ்லிம்  மக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் பேச வேண்டும். இரண்டு இனத்தவர்களும்  அடித்துக் கொள்ள வேண்டும்.அதனூடாக தாம் அரசியல்  இலாபம் தேட வேண்டும் என்பது இந்த இரண்டாவது தரப்பின் எண்ணமாகும். இந்த இரண்டு தரப்பும் தற்போதைய  பிரச்சினையை  கொண்டு குளிர்காய்வது வெளிப்படையாக தெரிகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இந்த  விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை  அறிக்கை ஊடாக உத்தியோகபூர்வமாக  விரைவில் அறிவிக்கும்.  இந்த சீருடை பிரச்சினையில் தமிழ் மக்களையும், தமிழ் அதிகாரிகளையும் தொடர்புப்படுத்தியிருக்க  வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது  நிலைப்பாடாகும்.

இந்த சீருடை தொடர்பான சுற்றுநிரூபத்தை அரசாங்கமே வெளியிட்டது.முஸ்லிம் சமூகத்தினர்  கலாசார ஆடையுடன் சேவைக்கு வருகைத்தரும் வகையில் சுற்றுநிருபத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடமே குறிப்பிட வேண்டும்.

அதனை விடுத்து சுற்றுநிரூபத்தை திருத்தம் செய்யாமல், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இனவாத கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் தான் அரசியலமைப்பின்  20 ஆவது திருத்தத்துக்கும், கொவிட் காலத்தில் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்ளை தகனம் செய்யும் தீர்மானத்துக்கும் ஆதரவளித்தார்கள். அப்போதைய ஆட்சியாளர்களின் காலில் விழுந்துக் கிடந்தார்கள்.

சுற்றுநிருபம் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்கு தற்றுணிபு இல்லாமல் இன்று  இவர்கள்  தமிழ் மக்கள் மீது  குற்றஞ்சாட்டுகிறார்கள். இனவாதவமாக பேசுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. முஸ்லிம் மக்கள் அவர்களின் கலாசார ஆடையுடன் சேவையில் ஈடுபடுவது அவர்களின் சுதந்திரமாகும். திருத்தங்களை முன்னெடுப்பதை விட்டு விட்டு வைத்தியர் சுகுணன் மொசாட் அமைப்புடன் தொடர்புப்பட்டவர் என்று அவர் மீது குற்றஞ்சாட்டுவது முறையற்றது, கடந்த அரசாங்கங்களில்  சுகாதார அமைச்சில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் பதவிகளை வகித்தவர்கள் ஏன் இந்த சுற்றுநிரூபம் பற்றி பேசவில்லை.

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் போது பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண்பதற்காகவே முயற்சிக்கிறோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற பல விடயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தால் தீர்க்கப்பட வேண்டிய பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண முடியாத நிலை ஏற்படும்.

முஸ்லிம் சகோதரிகள் அவர்களின் கலாசார அம்சங்களுடன்  பணிகளில் ஈடுபடும் வகையில் அரசாங்கம் சுற்றுநிரூபத்தை வெளியிட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதனை விடுத்து விட்டு கல்முனை வைத்தியசாலையை மாத்திரம் இலக்குப்படுத்தி அந்த மக்களையும், அதிகாரிகளையும்,இனவாதத்துடன் குற்றஞ்சாட்டும் ஒருசில அரசியல்வாதிகளின் மிகவும் கேவலமான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பிரச்சினைக்கு அரசாங்கம்  முரண்பாடற்ற வகையில்  தீர்வை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *