இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, நடக்க முடியாத நிலையில் இருந்த 97 வயது மூதாட்டி ஒருவர் வாழை மரக் கட்டைகளால் ஆன தற்காலிகப் படகில் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சரிங் கிராமத்தில் வெள்ள நீர் வேகமாகப் புகுந்தது. ஜூலை 19 நள்ளிரவில், 97 வயதான லோகதா துவாரா (Lokada Duarah) என்ற மூதாட்டியை அவரது மகனும் மருமகள் பொர்னாலி பாருவாவும் வாழை மரக் கட்டைகளால் படகு செய்து, அதில் ஏற்றி 3 முதல் 4 அடி ஆழமுள்ள வெள்ள நீரில் நடந்து சென்று பாதுகாப்பான முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
அசாமில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 75,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
முன்னாள் பத்திரிகையாளரும், சிறந்த கால்நடை வளர்ப்பாளருமான பொர்னாலி பாருவாவுக்குச் சொந்தமான 300 ஆடுகள், வாத்துகள் மற்றும் கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சரிங் கிராமத்தில் பாருவா குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தாலும், அவர்கள் வாழ்நாளில் இதுபோன்ற வெள்ளத்தைப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகையில் தொடர் கனமழை, காடுகள் அழிப்பு, ஆற்றுப் படுகைகளில் அதிகரித்து வரும் மனித ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான திட்டமிடல் இல்லாத உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply