சுந்தர் பிச்சை ஒரு அரக்கன் – ட்ரம்பின் வார்த்தையால் பரபரப்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டத்தின்போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரக்கன் எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மெட்டா நிறுவனத்தின் மார்க் ஸுக்கர்பெர்க், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் டேரியோ அமோடி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு மற்றும் நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்காணிப்பதற்கான கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், சுந்தர் பிச்சையை அறிமுகப்படுத்தியபோது, அவரது தொழில்நுட்பத் துறை சாதனைகளைப் பாராட்டும் வகையில், “இவர் ஓர் அரக்கன். யாருக்கும் அது தெரியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை சிரித்தபடி தலைகுனிந்து நின்றதுடன், ஒரு கட்டத்தில் ட்ரம்பின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை கூப்பியதாக காணொளிகளில் பதிவாகியுள்ளது.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், எதிர்காலத்தில் ‘Artificial Intelligence’ என்பதற்குப் பதிலாக ‘Super Intelligence’என்ற பெயரைப் பயன்படுத்துவது குறித்து தொழில்நுட்பத் துறை தலைவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *