திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்களை உடன்பிறப்புகளால் அந்தக்கட்சி எதிர்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் இன்று சட்டசபையில் விசிக தலைவர் திருமாவளவன் என்னுடைய ஆசான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
அவர் பேசியதாவது, “எங்கள் தலைவருக்கும், அண்ணன் தொல்.திருமாவளவனுக்கும் இடையே இருந்தது வெறுமனே தேர்தல் உடன்பாடு, தேர்தல் கூட்டணி கிடையாது.
இது கொள்கை கூட்டணி. இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் எனில், என்னுடைய அரசியல் ஆசான் என்றால் அது தொல் திருமாவளவன்தான் என்றும் பலமுறை கூறியிருக்கிறேன்.
எனவே என்றைக்குமே தொல்.திருமாவளவனுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என பேசியிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விசிகவினரால் வரவேற்பை பெற்றிருக்கிறது.
முன்னதாக திமுக முன்னாள் அமைச்சர்களை பாராட்டி அமைச்சர் வன்னி அரசு பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பதிலளித்தபோதுதான் திருமாவளவனுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக விசிகவுக்கும், தவெகவுக்கும் இடையே சலசலப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் சட்டசபையில் வைத்து, திருமாவளவன்தான் என்னுடைய ஆசான் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
Leave a Reply