“என்னை யாரும் தடுக்க முடியாது!” – அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய ‘லார்ட்’ ஆமை!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், சுமார் 45 கிலோ எடையுள்ள இராட்சத ஆமை ஒன்று தனது வீட்டை விட்டு வெளியேறி தப்பிச்செல்ல முயன்ற சுவாரசியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டென்வர் நகரின் தெற்கே உள்ள லிட்டில்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வளர்த்து வரும் ‘லார்ட்’ என்ற பெயருடைய ஆப்பிரிக்க சுல்காடா வகை ஆமையே இவ்வாறு வீட்டின் வேலி இடுக்கின் வழியாக வெளியேறியுள்ளது.

மெதுவாகச் சென்று வீட்டின் அருகிலிருந்த வீதியைக் கடக்க முயன்ற இந்த ஆமையைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் ஆமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் ஆமையின் உரிமையாளரும் அங்கு வருகை தந்தார்.

ஆமையின் அதிக எடை காரணமாக அதனைத் தனியாக நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் இராட்சத ஆமையைப் பத்திரமாகத் தூக்கிச் சென்று, அதன் உரிமையாளரின் வீட்டுத் தோட்டத்தில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளைக் காவல்துறையினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் பதிவு இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *